மூழ்கிய 100 ஆண்டுகளுக்கு பிறகு டைட்டானிக் கப்பலில் பதிக்கப்பட்ட உலோகவில்லை ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்டது.
டைட்டானிக் என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த 1912–ம் ஆண்டு ஏப்ரல் 12–ந்தேதி இங்கிலாந்தின் சவுத் ஆம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2,224 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்தனர்.
இக்கப்பல் புறப்பட்ட 2 நாட்கள் கழித்து ஏப்ரல் 15–ந் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. அதில் 1500–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
அக்கப்பல் மூழ்கி சுமார் 103 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னர் தற்போது அதன் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து பயணிகளின் பொருட்களும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது டைட்டானிக் கப்பலில் பதிக்கப்பட்ட உலோகவில்லை ஒன்று ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது வெள்ளி மற்றும் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டது. அதை ‘தி ராயல் மெயில் ஸ்டீம்ஷிப் யூனியன்’ வழங்கியது.
டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு அதாவது 1912–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
1.8 கிலோ எடையுடன் 28 செமீட்டர் நீளமும், 37 செ.மீட்டர் அகலமும் கொண்ட அந்த உலோகவில்லை கப்பலுக்கு வெளியே பதிக்கப்பட்டது.
அந்த உலோகவில்லை தற்போது ஸ்பெயினில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பார்சிலோனாவில் கலைப்பொருள் விற்பனையாளரிடம் அதை விற்கமுயன்றார்.
அதை முதியவர் ஒருவர் தனது பேரனுக்காக விலைக்கு வாங்கினார். சமீபத்தில் அது ஸ்பெயின் டைட்டானிக் அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. இந்த உலோக வில்லை டைட்டானிக் கப்பலில் இருந்து வெளியேறி கரை ஒதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.