ரஷ்யாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர் 40 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்தவர் ஆனா. சுற்றுலா வழிகாட்டியான இவர் ஒரு சுற்றுலா குழுவினருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அழகிய மாஸ்கோவை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் விரும்பியதால் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளை விட்டு சற்று தூரம் சென்ற ஆனா, அருகில் இருந்த பாலத்தின் அருகே சென்று செல்பி எடுக்க முயற்சித்தார்.
அப்போது அவர் நிலை தடுமாறி அங்கிருந்த 40 அடி பள்ளத்துக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆனாவின் மரணத்தை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், “திடீரென ஆனா கீழே விழுந்துவிட்டதாக அனைவரும் சத்தமிட்டனர். ஆனால் நான் இதை ஜோக்காக நினைத்தேன். ஆனால், பாலத்தற்கு அருகில் மக்கள் அவசரமாக ஓடிச்சென்று எட்டிப் பார்த்தபோதுதான் அவர் நிஜமாகவே விழுந்துவிட்டது தெரிய வந்தது” என்றார்.
ரஷ்யாவில் ஏற்கனவே 10 பேர் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது உயிரிழந்துள்ளனர். எனவே, உயிரிழப்புகளை தவிர்க்க அந்நாட்டு அரசு அண்மையில் பாதுகாப்பான செல்பி எடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.