சுற்றுலா பயணிகளை கவர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்தியன் ரெயில்வே சுற்றுலா உணவு கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) ஏற்பாடு செய்து வருகிறது.
தற்போது ஆட்டோ டிரைவர்களை இதில் இணைக்கும் வகையில் ‘சுற்றுலா நண்பன் ஆட்டோ’ கடந்த 4–ந்தேதி சென்னையில் ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்தது. சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், விமான நிலையத்தில் இந்த ஆட்டோக்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பற்றி ஆட்டோ டிரைவர்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50 டிரைவர்கள் பங்கேற்றனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சுற்றுலா மையங்கள் குறித்த முழுவிவரங்கள், தூரம், சென்று வருவதற்கான நேரம் போன்றவற்றை துல்லியமாக டிரைவர்கள் சுற்றுலா பயணிகளிடம் விளக்கி கூற வேண்டும்.
சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று பேசவும், பாதுகாப்பாக அழைத்து சென்று வருவது குறித்தும் பயிற்சியில் விளக்கப்பட்டது.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி கூடுதல் துணை பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறியதாவது:–
இந்த திட்டத்தில் முதலில் 50 ஆட்டோக்கள், சுற்றுலா வேன், கார்கள் இணைக்கப்படும். அரசு நிர்ணயித்துள்ள ஆட்டோ கட்டணத்தை கட்டாயம் டிரைவர்கள் வசூலிக்க வேண்டும். கூடுதலாக கேட்க கூடாது. டிரைவர்கள் சீருடை மற்றும் பெயர் பொறித்த ‘பேட்ஜ்’ அணிய வேண்டும்.
சுற்றுலா நண்பன் ஆட்டோ திட்டம் அடுத்த கட்டமாக புதுச்சேரி, மதுரையில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் முடிந்தவுடன் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இந்த வகையிலான சிறப்பு ஆட்டோக்களுக்கு தனிவசதி செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.