ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும் கிடையாது. பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். நீண்டநாள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்துக்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் எனக்கருதி வெளியூர் சென்று திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார்கள். இரவு 11 மணி அளவில் காதல் ஜோடிகள் இருவரும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (39). வெங்கடேஷ் உள்பட 4 பேர் இருவரையும் வழிமறித்தனர். ‘‘நாங்கள் போலீசார் இந்த நேரம் எங்கு செல்கிறீர்கள்’’ என்று கேட்டனர். அதற்கு ராஜேஷ் நாங்கள் காதலர்கள். இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்து 4 பேரும் ராஜேசை தாக்கி விரட்டினர். பின்னர் அவரது காதலியை கடத்தி சென்று 4 பேரும் கற்பழித்தனர். இதற்கிடையே தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஷ் குண்டூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த சுதாகர், வெங்கடேஷ் ராவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள். கைதான சுதாகர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார்.
இதற்கிடையே தன்னால் பாதிக்கப்பட்ட காதலியை தானே திருமணம் செய்வதாக ராஜேஷ் கூறினார். இரு குடும்பத்தாரின் சம்மதத்தின் பேரில் ஊர் கோவிலில் வைத்து காதலிக்கு ராஜேஷ் தாலி கட்டினார்.