பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது, மிக கவலை தரும், ஒரு
விஷயமாக இருக்கிறது. குற்றவியல் நீதி முறைக்கு பாலியல் பலாத்காரம், ஒரு
சவாலாக அமைந்து வருகிறது. இந்த குற்றங்களுக்கு, கடும் தண்டனை வழங்கப்படணும்
என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதே சமயம் பாதிக்கப்பட்ட
பெண்களின் அவல நிலையை அது மறைத்தும் விடுகிறது.
பாலியல் பலாத்காரம்
என்பது, பாதிக்கப்பட்டவரின் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும், ஒரு
அனுபவமாக மாறி வருகிறது. பலருக்கு அதன் விளைவுகள் நீண்ட கால பாதிப்பை
ஏற்படுத்தி விடும். பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என்பது, ஏதோ இப்போது தான்
நடக்கிற மாதிரி நமக்கு தெரிகிறது. ஆனால், காலங்காலமாய் பெண்களை
பலாத்காரமாய் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்துள்ளது.
மிகப்
பெரிய வித்தியாசம், வயசுப் பெண்களை மட்டுமே தொந்தரவு செய்தது போய், இப்போது
சின்னஞ் சிறிய குழந்தைகளையும், பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்துவதனால்,
மிகப் பெரிய சமூக சீர்கேடாக காட்சியளிக்கிறது. இப்படி பாலியல் கொடுமை
செய்பவர்களை தண்டிப்பதற்கு முன், நாம் நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்
கொள்வது என்று, அம்மாக்கள் சிந்திக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு,
நேர்மறையான எண்ணங்களை ஊட்டி வளர்க்க வேண்டும். புராண இதிகாசங்களில்
கூறியுள்ளது போல, வயிற்றில் வளரும் சிசுவிற்கே நாம் போதிக்க வேண்டும்.
அதுவும்,
'இதை செய்யாதே, அப்படி போகாதே, யாரிடமும் பேசாதே, யார் எதைக் கொடுத்தாலும்
வாங்கி சாப்பிடாதே' என்றெல்லாம் சொல்லி வளர்ப்பதற்கு பதில், நீ அப்பா,
அம்மாவிற்கு செல்லம், நாங்கள் தான் உன்னை தூக்கி கொஞ்சுவோம். உனக்கு
வேண்டியதை வாங்கி தருவோம். விளையாடுவோம் என அனைத்து விஷயங்களையும்,
நேர்மறையாக சொல்லிக் கொடுத்தாலே, குழந்தைகள் அதை தவிர, மாற்று விஷயங்களைப்
பற்றி யோசிக்கக்கூட தெரியாமல் நல்லதை மட்டுமே நினைப்பர்.
எங்கள் பேச்சை
கேட்கலைன்னா, இப்படி கெட்டு போய்டுவாய் என்று தீர்வு சொல்லாமல்,
தீர்மானமாகவே சொல்லணும். நீ கெட்டப்பையன் இல்லன்னு கூட சொல்லக் கூடாது.
இப்படி சொல்லி வளர்த்தால், வெளியாட்கள் யார் எதை கொடுத்தாலும் வாங்கிக்
கொள்ளத் தோணாது.
அக்கம் பக்கத்து வீட்டினரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம்
காட்டுவதில்லை. நகர வாழ்க்கையின் ஓட்டத்தில், இதற்கு நேரம் ஒதுக்க
முடியாது என்று பெருமைப்படக் கூடாது. பெரியவர்கள் கூடி பேச விரும்ப
மாட்டார்கள். ஆனால், குழந்தைகள் விளையாட விரும்புவர்.
அதற்காக, அக்கம்
பக்கம் வீட்டினரை தெரிந்து, பழகி வைத்துக் கொள்வது நல்லது. அப்போது நமக்கு
தெரிந்துவிடும் யாரெல்லாம் நல்ல நட்புடன் பழகுகின்றனர், யார் கூடவெல்லாம்,
நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கலாம் என்று!
இரண்டு வயது குழந்தையை,
பலாத்காரம் செய்கிறான் என்றால், அதை கவனிக்கக் கூட நேரமில்லாமல், நாம் என்ன
செய்கிறோம் என்பதை ஆராயுங்கள். பக்கத்து வீட்டு ஆள் தூக்கிக் கொண்டு போகிற
அளவிற்கு, நாம் விட்டு வைக்கிறோம் என்றால், அப்படியென்ன நம் வேலை
வீட்டில்...?
யோசியுங்கள்; கவனம் வையுங்கள்; உங்களுக்கு யார் மீதாவது
ஒரு சிறு துளி சந்தேகம் என்றாலும் குழந்தையிடம் நீ இப்படி இரு, அப்படி
இருன்னு சொல்லி தருவது கூட செல்லுபடியாகாது. இப்படி எச்சரிக்கை செய்வதற்கு
பதில், நாம் தனி கவனம் எடுத்துக் கொள்ளணும்.
ஏனென்றால், சிறு
பிள்ளைகளுக்கு, 'சாக்லெட்' கொடுத்தால் போதும். அப்பாக்களும் கவனம்
எடுத்துகிடணும், தன் நண்பர்களைக் கூட பார்த்து தான் பழகணும். வீட்டிற்கு
அனுமதிக்க வேண்டும். நல்லவர்களைக் கூட நகர சூழ்நிலை தப்பாகத் தான் மாற்றி
இருக்கிறது.
பெண்களின் கண்ணோட்டம்: ஒரு பெண்ணிற்கு யார் என்ன
அர்த்தத்தில் பேசுகின்றனர், என்ன நோக்கத்தோடு பழகுகின்றனர் என்பதை
தெரிந்துக் கொள்வது ஒன்றும் கடினமானது அல்ல. அதன்படி, நம்மை நம் குழந்தைகளை
பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
பொருளாதார மேம்பாட்டுக்காக, கணவன் -
மனைவி இருவரும் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். அதனால், உதவிக்கு ஆள்வைத்து
பிள்ளையை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மொத்தமாய் அவர்களை மட்டுமே நம்பி
குழந்தையை விட்டுவிடக் கூடாது. கூட்டுக் குடும்பம் இல்லாததும் ஒரு காரணம்.
நடுவயது பெண்களை கேட்டுப் பார்த்தால், தெரியும் இதன் அருமை.
முன்பெல்லாம்
எல்லா உறவுகளும் வீட்டில் இருப்பர், அம்மாவும் சேர்ந்து. ஆனால், தற்போது
யாருமே வீட்டில் இருப்பதில்லை, அம்மாவையும் சேர்த்து. 1956ல் இயற்றப்பட்ட
சட்டத்தின்படி, ஒரு குழந்தையை ஐந்து வயது வரை, அதன் தாயிடமிருந்து பிரித்து
வைக்கவோ, வளர்க்கவோ கூடாது. நம்மால் பின்பற்றவே முடியாத சட்டம் இது.
ஆனால், எவ்வளவு அடிப்படை நன்மையுடையது தெரியுமா?
வீட்டில் ஒருத்தர்தான்
வேலைக்கு போகவேண்டும் என்கிற ஒழுங்கு வந்தால், இதுமாதிரியான நுணுக்கமான
பிரச்னைகளை சரி செய்ய முடியும். ஆனால், இதை ஒத்துக் கொள்ள முடியுமா? பெண்
உரிமை, சுதந்திரம் என்று கொடி பிடிக்க ஆரம்பித்து விடுவோம். வீட்டிற்கு ஒரு
வெளி வேலை. அது ஆணோ, பெண்ணோ வேலைஇல்லாத திண்டாட்டமே காணாமல் போய்விடுமே.
அப்படியில்லை, வீட்டோடு நம் ஆள் ஒருத்தர் இருக்கணும்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்த
பாதகச் செயலை செய்பவர்களுக்கு கூடுதல் தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்யப்பட
வேண்டுமென, சென்னை ஐகோர்ட் கூறிய ஆலோசனையை பெண்கள் கமிஷன் வரவேற்றாலும்,
மனித உரிமை பேசும் சிலர் எதிர்க்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும்,
பெண்களுக்கும் மனித உரிமை உண்டு. பாலியல் வன்முறையும் மனித உரிமை மீறலே;
சமூக பொருளாதார தளங்களில் பெண்களைச் சமமற்றவர்களாகப் பாகுபடுத்துகிறது.
இப்படியான
சீர்கேடுகளை தீர்க்க, கடுமையான சட்டம் சரி தான் என்றாலும், தவறு நடந்த
பின், தண்டனை என்பதை விட, அந்த தவறு நடக்காமல் இருக்க, நடவடிக்கைகளை
எடுப்பது தான் சால சிறந்தது. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமும்,
சீர்திருத்தமும் பெண்களால் தான் ஏற்படும்.
பெண்கள் தம் குழந்தைகளை
காப்பாற்றிக் கொள்ள, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்வதற்கு
தயாராய் இருக்க வேண்டும். குடும்பத்தைக் கட்டிக் காக்கும் திறன் கொண்ட
பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் ஆரோக்கியமற்ற சமுதாயம்
தான் உருவாகும்.
'துணிந்து நில், தொடர்ந்து செல்' என்ற
கருத்துமொழிக்கேற்ப பெண்கள் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படும்போது
துணிந்து, அதை எடுத்து சொல்லி தங்களுக்கான பாதுகாப்பையும், உரிமைகளையும்
பெற்று, ஒரு நல்ல சமுதாயம் உருவாக துணையாக இருக்க வேண்டும் என்பதே,
'நாயகி'யின் வேண்டுகோள்.
- ம.வான்மதி