Sunday, 8 November 2015

கல்லடி பட்டாலும்.... கண்ணாடியான உனக்குதான் பாதிப்பு கண்ணே!


டிவி'யில் ஒரு நிகழ்ச்சி. தொடை வரை கவுன் போட்ட ஒரு பெண் விருந்தினர், கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க, ஒரு தொகுப்பாளர், பூங்கொத்து கொடுக்க குனிந்து வணக்கம் சொல்கிறார். 

அந்த விருந்தினரோ, வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்து, 'இதை விட நல்லா குனிந்து வணக்கம் சொன்னா தான், பூங்கொத்தை வாங்கிக் கொள்வேன்' என்று கூற, தொகுப்பாளர், 'இதற்கு மேலும் நான் குனிவேன். அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்' என்கிறார். அனைவரும், கைத்தட்டி சிரிக்கின்றனர். 
இதை என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த, 10 வயது பக்கத்து வீட்டுப் பெண், எனக்கு முன்னே சிரிக்க ஆரம்பித்து விட்டாள். 

அறிவியல் முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி, ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பழகுவது, பெண் பிள்ளைகளும் தனியாக வெளிநாடு சென்று வேலை பார்ப்பது என்று, பல பக்கமும் முன்னேறியபடி உள்ளனர். நாகரிகம் வளர வளர, கலாசார சீரழிவும் நடக்கிறது.

புதிய தொழில்நுட்பங்கள் வர வர, பெண்களின் செயல்பாடு, வெகு ஆபத்தானதாக மாறுகிறது. எல்லா தொழில் நுட்பங்களும் பெண்ணை வேவு பார்க்கவும், அவளுக்கு தீமை செய்பவையாகவும் தான் இருக்கிறது. வெளியில் செல்லும் பெண், ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துடன் தான் உலவ வேண்டியிருக்கிறது. 

இவை எல்லாம், பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படக் கூடிய நிலை. ஆனால், பெண்கள் இந்த நவீன தொழில் நுட்பத்தினால், தாமாகவே கெட்டுப் போகும், நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை, மக்கள் மெதுவாக உணர்கின்றனர். தகவல் பரிமாற்றம் என்பது, வெறும் செய்திகளை மட்டும் மாற்றிக் கொள்வது என்ற நிலை மாறி, இப்போது, எதை வேண்டுமானாலும் பரிமாற்றிக் கொள்ளத் தக்கதாய் வளர்ந்துள்ளது. நிறைய உதாரணங்களை, வெளிப்படையாக எழுதவே தயக்கமாய் இருக்கிறது. 

'மொபைல்போன், பேஸ் புக், டுவிட்டர்' என, வேகமாய் வளர்ந்து விட்டோம். ஆனால், அவற்றை தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறோம் என்பது தான் சிக்கல். முறை தவறிய உறவுகள், ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் அதிகரிக்கத்தான், இத்தகைய இணைய ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது, ஓர் ஆய்வில் கண்ட உண்மை. 

'ரீ-சார்ஜ்' செய்யும்போது...
கல்லூரி பெண்கள், தொடர்ந்து ஒரே கடையில், அவர்களின் போனுக்கு, 'ரீ-சார்ஜ்' செய்வது கூட, பிரச்னையாக மாறுகிறது. கடை நடத்துபவர், கொஞ்சம், கொஞ்சமாய் பேசி, அந்தப் பெண்ணை நட்பாக்கி, அந்த பெண்ணை ஒரு குழுவில் சேர்த்து, சீரழித்த கதை உண்டு.

ஆண் என்கிற ஒரு இனத்தையே, அது தந்தை, அண்ணன், பக்கத்து வீட்டினர், பள்ளி ஊழியர்கள் என, யாரையும் நம்ப முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, 15 வயது சிறுவன், அதே கடையில் வேலை பார்த்த, 22 வயது பெண்ணுக்கு, தொடர்ந்து நள்ளிரவில் போன் செய்து, அவள் செய்த வேலைகள், உடை, சாப்பாடு என்று ஒன்று விடாமல் கூற, யார் அது என்று கண்டுபிடிப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

பள்ளிகளில் ஏதாவது புராஜக்ட் செய்ய சொல்லும் போதே, குறிப்பிட்ட, 'வெப் சைட்'டில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அந்த வெப் சைட்டிற்கு போக, ஏதாவது எழுத்தை நாம் அடித்தால், அது வேறு ஒரு ஆபாச தளத்தை எடுத்துக் கொடுக்கிறது.

காதால் கேட்ட பல ஆபாசங்களை, கண்களால் பார்க்கும் போது, அதை செய்து பார்த்துவிட வேண்டும் என தோன்றுகிறது; மனதில் கிளர்ச்சி ஏற்படுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், யார், என்ன உறவு, சரியா, தவறா, பின் விளைவுகள் என்ன என்பது பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை. வெளிநாட்டில், பாடங்கள் எல்லாம் வீடியோவாக நடத்தப்படுகின்றன, பார்த்தவுடன் புரிவதற்காக. அது போல் தான் இதுவும்; பார்த்தவுடன் பற்றிக் கொள்கிறது.

இளைஞர்களுக்குள் இப்போ ஒரு, 'ட்ரெண்ட்' உருவாகி வருகிறது. 'போர் அடிக்குது; யார் போன் நம்பராவது கொடு' என்று மற்றவர்களிடம் வாங்கி, பேச ஆரம்பித்து, பழகி, போட்டோ பரிமாறி, அவன் ஒருபுறம் சொல்வதையெல்லாம் இவளும், இவள் சொல்வதை மறுபுறம் அவனும் செய்ய, அதை அப்படியே வீடியோவாக எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர்.

தொடர்புகளை, 'பிளாக்' செய்து...
மிக சமீபத்தில் அப்படி நடந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு விஷயம் தெரிய வர, அந்த பெண்ணின் அம்மா தற்கொலை செய்து கொண்டார். பெண்களும், இரண்டு, 'சிம் கார்டு'கள் வைத்துக் கொள்வது, இரண்டு, 'இ - மெயில்' கணக்கு வைத்துக் கொள்வது, பேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்வது, ஒரே வீட்டில், அண்ணன் - தம்பி இருவரிடமும் தகாத உறவு வைத்துக் கொள்வது, திருமணம் நிச்சயம் ஆனதும், இணைய தொடர்புகளை, 'பிளாக்' செய்வது, மொபைல் போன், 'சிம் கார்டை' மாற்றுவது என, 'ஜகஜ்ஜால கில்லாடி'களாக உள்ளனர்.

வீட்டில் சின்ன பிரச்னையென்றாலும் வெளியில் ஆறுதல் தேடுவது, அப்படி ஆண் நண்பர்கள் இல்லையென்றாலும், பெண்களுக்குள் நட்பை உருவாக்கி, ஓரினச் சேர்க்கையில் இணைவது, உறவுமுறை தவறென்றாலும் உறவை ஏற்படுத்திக் கொள்வது, தன் அழகிற்கும், அறிவிற்கும், தன் பின்னால் எத்தனை பேர் வருகின்றனர் என்பதைப் பார்த்து ரசிக்க, ஆழம் தெரியாமல் காலை விட்டு தறிக்கெட்டுச் செல்லும் நிலையில் உள்ளனர்.

இப்போது பெரிய ஷாப்பிங் மாலில் எல்லாம் இலவச, 'வை பை' வசதிகள் கொடுக்கின்றனர். தயவு செய்து அந்த இடங்களில், உங்கள் போனை, 'ஆன்' செய்யவே செய்யாதீர்கள். அங்கிருக்கும் அனைவரும், ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் இணைக்கப்படுகிற மாதிரி ஆகிவிடும். பின் பிரச்னைகள் வரிசைகட்டி வர ஆரம்பித்து விடும்.

முகநூலில் தேவையற்ற தனிப்பட்ட படங்களை பதியாதீர்கள். அந்தரங்கங்கள், வேண்டவே வேண்டாம். இவற்றையெல்லாம் எப்படி தடுப்பது என்று சிந்தித்தே ஆக வேண்டும்.

விடலைப் பருவத்தில், ஒரு பெண்ணுக்கு, அவள் தாயைப் போல் நெருங்கிய தோழி இருக்க முடியாது. பள்ளிப் பருவத்தில் அம்மாவின் பக்க பலத்தோடு தனித்து நின்று காலூன்ற கற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை, பின் காலத்தில், மிகப் பெரிய தப்பு செய்ய தயங்கும். பெண்களின் இளமைப் பருவம், கண்ணாடி போன்றது. கல்லடி பட்டால், பாதிப்பு கண்ணாடிக்கு தான்; கல்லுக்கு அல்ல! எதிர்காலமே சுக்கு நூறாகி விடும்.

விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்களைக் கூட, பெற்றோர், தங்கள் கவனத்திலும், பாசத்திலும் கட்டி வைத்து வழிகாட்ட வேண்டும். 

என்ன கண்காணிப்பு இருந்தாலும், தனக்கென உண்டான விழிப்புணர்வுடன் பெண்கள் செயல்பட்டால் தான், தன் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். செய்ய வேண்டும், இளம் பிஞ்சுகள்!
- ம.வான்மதி

Subscribe to get more videos :