உலகெங்கிலும், பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதனை முற்றிலும் தடுக்கும் நோக்கில் அமெரிக்க பல்கலைக்கழகம், தற்கொலை செய்துகொள்ள எண்ணுவோரின் மன ஓட்டத்தை முன்கூட்டியே அறிய ரத்தப் பரிசோதனை செய்வது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உளவியல் ஆராய்ச்சி நிலையத்தின் நரம்பியல் துறை தலைவர் நிக்யூலெஸ்க்யூ தலைமையிலான குழுவினர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏராளமான ஆண்களிடம் நடத்திய ஆய்வில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்களின் மனநிலையை ரத்தப் பரிசோதனை மூலமாக முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம் என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களின் மனநிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விடையில் தற்கொலை செய்ய நினைத்தவர்களைப் பற்றி 80 சதவிகிதம் சரியான முடிவுகள் கிடைத்ததாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.
யாருமே தற்கொலை எண்ணம் இருப்பதைப் பற்றி நேரடியாக பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள் என்பதால் இவர்களிடம் தற்கொலை தொடர்பான நேரடிக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஸ்மார்ட்போன்களில், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியின் உதவியாலும் இது ஊர்ஜிதமானது. இந்த மூன்றடுக்கு முறையில் நடந்த பரிசோதனைகளில் 92 சதவிகிதம் துல்லியமாக முடிவு கிடைத்துள்ளது.
இவ்வாறு தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பது முன்னரே கண்டறியப்படும்போது, அவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்க முடியும். அதன்மூலம் தற்கொலைகள் தடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வு தற்போது ஆண்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இனி, வருங்காலத்தில் இதே ஆய்வு, பெண்களிடமும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் சாதகமாக வந்தால், உலகில் தற்கொலை செய்துகொள்ள எண்ணுவோரின் எண்ணிக்கை வெறும் ரத்தப் பரிசோதனையின் மூலமாகவே பெருமளவு குறையும் வாய்ப்பு உள்ளது என நிச்சயமாக நம்பலாம்.